உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணை, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த கோரி பல நாடுகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். போரால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள கிழக்கு போலந்தில் ஏவுகணை ஒன்று விழுந்ததில் போலந்து நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இது ரஷ்ய ஏவுகணை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை, போலந்துக்கான ரஷ்ய தூதருக்கு இதுகுறித்து அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர், மற்றொரு நாட்டில் நேரடி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தை தாக்குகிறதா ரஷ்யா?
சூழ்நிலைகள் தெளிவாக இல்லை. இந்த ஏவுகணையை யார், எங்கிருந்து வீசினார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த ஏவுகணை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என போலந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இருப்பினும் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் இதை பொறுமையாக கையாள்கிறோம். இது ஒரு கடினமான சூழ்நிலை என்றார். மேலும், போலந்து
ராணுவம் தயார் நிலையில் வைக்கப்படுவதாக அவர் கூறினார்.
போலந்து மீதான ரஷ்ய தாக்குதல் ஏன்?
இது மிகத் தீவிரமாக பார்க்கப் பட வேண்டும். ஏனெனில் போலந்து நேட்டோ நாடுகளின் உறுப்பினராக உள்ளது. மேலும் ஒப்பந்த விதிமுறைகளின்படி, ஒரு நேட்டோ உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படுகிறது. நேட்டோ இதில்
தீவிரமாக தலையிட முடியும். உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலென்ஸ்கி இது போரின் “மிக முக்கியமான விரிவாக்கம்” என்று விவரித்தார்.
இப்போது என்ன நடக்கும்?
நேட்டோ ஆர்டிக்ல் 4-ஐ செயல்படுத்துமாறு அதிபர் டூடா கூறலாம். ஆர்டிக்ல் 4 என்பது உறுப்பு நாடுகளில் ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற உறுப்பினர்களுடன் ஆலோசிப்பது ஆகும். போலந்து அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், @jensstoltenberg, @POTUS, @RishiSunak மற்றும் @OlafScholz ஆகியோரை குறிப்பிட்டு எங்கள் நாட்டு தூதர் வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலில் பங்கேற்பார். அவர் ஆர்டிக்ல் 4-ஐ செயல்படுத்துவது குறித்து கோரிக்கை வைப்பார், அது தொடர்பான ஆலோசனையிலும் ஈடுபடுவார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
நேட்டோவின் ஆர்டிக்ல் 4 (Article 4 of NATO)
நேட்டோ ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் இது குறித்து ஒன்றாக கலந்து ஆலோசிக்கும். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
பின்னர் எவ்வாறு நேட்டோ தலையிட முடியும்?
இது நேட்டோ ஆர்டிக்கல் 5 இன் கீழ் உள்ளது. நேட்டோ உறுப்பினர்கள் “ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய தாக்குதல் அவர்கள் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்” என்று அந்த விதி கூறுகிறது, அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பினரும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
இந்த ஆர்டிக்கல் ஆயுத நடவடிக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது. மேலும் பிற வகையான பதிலளிப்புகளுக்கும் வாய்ப்பு உள்ளது. அவை என்னவாக இருக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
நேட்டோ விதி 5 பிரிவை ஒருமுறை மட்டுமே செயல்படுத்தியுள்ளது – அது அமெரிக்காவின் 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதற்குப் பதிலடியாக நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றன.
17 11 2022
source https://tamil.indianexpress.com/explained/missile-hits-poland-2-dead-shock-waves-around-the-world-542625/