சனி, 19 நவம்பர், 2022

இபிஎஸ் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு

 

அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவரது முயற்சி வரவேற்கத் தக்க முயற்சி என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், வளர்ச்சி பணிகள் ஆய்வு குழு தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற
உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அதன் செயலாக்கம் குறித்து அதிகாரிகளிடம் திருமாவளவன் கேட்டறிந்தார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் முடிவு அல்ல. இதனை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இதிலும் அவர்களுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

காங்கிரஸ் ஆண்டாலும் பாஜக ஆண்டாலும் ஈழத்தமிழர் தொடர்பான பிரச்னைகளில் ஒரே நிலைப்பாடு தான். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். அவர்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்ற தோற்றம் பாஜகவால் உருவாக்கப்பட்டது. பாஜக ஈழத்தமிழர்கள் நலனில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்க முடியவில்லை. இந்திய கடற்படையாலும் இலங்கை கடற்படையாலும் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். இதுவே உண்மை நிலை.


அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தால் மெகா கூட்டணி என
பொருள்படும்படி எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாம். அதிமுக சுயமாக இருக்க வேண்டும். பாஜகவோடு துணை போக கூடாது. மதவாத சக்திகளுக்கு துணைபுரிய கூடாது. திராவிட கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜக என்ற மதவாத சக்தியை தமிழகத்தில் கால் ஊன்றுவதை தடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிசாமி கருத்தொன்றை தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவரது முயற்சி வரவேற்கத் தக்க முயற்சி” என்று தெரிவித்தார்.


source https://news7tamil.live/vishika-president-thirumavalavan-welcomed-epss-opinion.html