புதன், 23 நவம்பர், 2022

பப்ளிசிட்டிக்காக பெட்ரோல் பாம்… தஞ்சை பரபரப்பு

 22 11 2022

பப்ளிசிட்டிக்காக பெட்ரோல் பாம்… தஞ்சை இந்து முன்னணி நிர்வாகி கைது.. பரபரப்பு தகவல்கள்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து சக்கரபாணி வீடு முன்பு குவிக்கப்பட்ட போலீசார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் தனது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் கும்பகோணம் நகரச் செயலாளரான பி.சக்கரபாணி (38) ஆவார். சக்கரபாணி ‘பப்ளிசிட்டி’க்காக இந்தச் செயலைச் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் மீது அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டை வீசியதாக இந்து முன்னணி அமைப்பினருக்கு சக்கரபாணி தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி ரவளி பிரியா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதற்கிடையில், அப்பகுதியில் திரண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, ஒவ்வொரு முறையும் சக்கரபாணியின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணாவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், விளம்பரத்திற்காக தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், “பெட்ரோல் பாம் சுடர் பற்றவைக்க பாட்டிலில் பஞ்சுத் திரியாகப் பயன்படுத்தப்பட்ட துணி அவருடைய வீட்டில் பெட்ஷீட் போலவே இருந்தது. பெட்ஷீட்டில் இருந்த துணியை கிழித்து பாட்டிலில் திரியாக பயன்படுத்தியுள்ளார்.
மேலும், பெட்ரோல் எஞ்சியிருந்த பிளாஸ்டிக் பாட்டிலையும் கண்டுபிடித்தோம். அவர் அதை அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வாங்கினார், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

இதையடுத்து, சக்கரபாணி மீது 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 436 (வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து மூலம் தீங்கிழைவித்தல்) உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/hindu-munnani-leader-in-tamil-nadus-thanjavur-stages-fake-petrol-bomb-attack-arrested-546130/