சனி, 26 நவம்பர், 2022

5ல் ஒரு பங்கு வேட்பாளர்களுக்கு குற்றவழக்குகளில் தொடர்பு

 

குஜராத் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 167 பேருக்கு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் ஆம்ஆத்மி முதலிடத்தில் உள்ளது.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் வரும் 1ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். அந்த வேட்பாளர்களில் சுமார் 5ல் ஒரு பங்கினர் அதாவது 167 பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் இது 21 சதவீதம் ஆகும். இந்த 167 பேரில் சுமார் 100 பேர் தீவிரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி முதலிடத்தில் உள்ளது.  அந்த கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 32 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களில் பலர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூர குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.  குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்களில் 14 பேர்  குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

25 11 2022 

source https://news7tamil.live/candidates-link-with-criminal-cases-in-gujrat-election.html

Related Posts: