ஆளுநர் பதவி காலாவதியானது என்றும், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக ’வானவில் மன்றம்‘ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை இணைந்த செயல்திட்டமாகும்.
அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ’வானவில் மன்றம்’ திட்டம், இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, தூத்துக்குடி மாநகரில் உள்ள சிவந்தாகுளம் பள்ளியில் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கவர்னர் பதவி காலாவதியானது. அதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும். எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை” என்றார்.
source https://news7tamil.live/we-would-have-abolished-online-rummy-if-there-was-no-governorship-kanimozhi-mp.html