செவ்வாய், 29 நவம்பர், 2022

குஜராத் சட்டசபை தேர்தல்; வெல்ல போவது யார்?

 

29 11 2022

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் என்ன நடக்கிறது? யார் பெறுவார் அரியணையை? எந்த கட்சிக்கு சாதகம்? வெல்வது யார் என கணிக்க முடியாத மாநிலமா குஜராத்… அது குறித்து பார்க்கலாம்

குஜராத் மாநிலத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை விட, அதிகமாக அனல் தகித்தது. இதற்கு காரணம் குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சிகளுக்கிடையிலான அரசியல் உரைகள், செந்தீயாய் அனல் கக்கும் உரையாக மாறி, தேர்தல் களமே சூடாக இருந்ததாக அரசியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு அடுத்து மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உள்ளது. ஆட்சிகள் மாறினாலும், கட்சிகள் மாறினாலும் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி நன்றாகவே இருந்து வருகிறது. தொழில் துறையில் சிறப்பிடத்தில் உள்ளதை காரணமாக்கி, மத்திய அரசிடம் இருந்து, அதிக சலுகைகள் பெறும் மாநிலமாகவும் குஜராத் உள்ளது.

சுமார் 5 கோடி வாக்காளர்களைக் கொண்ட குஜராத்தின் தேர்தல் சட்டசபை தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1, மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


ஒரு பக்கம் தொடர்ச்சியாக 6 முறை குஜராத்தில் ஆளும் கட்சியாக தொடர்கிறது பாஜக அரசு. இந்த தேர்தலிலும் வென்றால் 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை நெருங்கும். அதனால் தான் குஜராத்துக்கு வாரம் ஒரு முறையாவது பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வந்து விழாக்களில், கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

மறுபக்கம் 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் சுமார் சரி பாதி எம்பிக்களையும், 2017ம் ஆண்டு தேர்தலில் சிறிய அளவிலான சறுக்கலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டதை எண்ணி ஏங்குகிறது காங்கிரஸ் கட்சி. ஒரு நிமிடத்தில் ரயிலை தவறவிட்ட பயணியைப் போல், எப்படியாவது குஜராத்தில் வென்றே தீருவது என அதிக அளவில் கூட்டங்கள் நடத்தியும், மக்களிடம் பிரச்சாரம் செய்தும், தேர்தல் பணியாற்றி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி என பல தலைவர்கள் குஜராத் தேர்தலுக்காக களமிறங்கினர்.

எகிறும் விலைவாசி, உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான பணவீக்கம் அதிகரிப்பு, கொரோனா நோய் தொற்றின் போது கேள்விக்குறியான சுகாதார கட்டமைப்பு, வேலை வாய்ப்பு கிடைத்தாலும் உயராத ஊதியம், போன்றவற்றால் எளிய, நடுத்தர மக்கள் அரசுக்கு எதிரான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


ஜி.எஸ்.டி வரி முறையால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொடர் பாதிப்புகளால் அரசு என்ன விளக்கம் கொடுத்தாலும் தொழில் துறையினரும் நம்பிக்கையின்றி உள்ளனர். பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக சலுகைகள் கிடைக்கின்றன. சிறிய தொழில் முனைவோர்கள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை என கூறுகின்றனர்.

பாஜக வலிமையாக உள்ளது. மக்கள் பாஜக ஆட்சியில் நன்மைகளை பெறுவதால் தான், முதலமைச்சர்கள் மாறினால் கூட பாஜகவை குஜராத் மக்கள் ஆதரிக்கின்றனர். இது இந்த தேர்தலிலும் தொடரும் என்கின்றனர் பாஜகவினர். குஜராத்தில் நிச்சயம் வென்று மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தே தீரும். இப்போதைய முதலமைச்சர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என பாஜக நம்புகிறது.

காங்கிரசோ பாஜகவின் அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு, இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும். மக்களிடம் பாஜகவினர் செய்யும் தவறுகளை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. பாஜகவின் சுயரூபம் இப்போது தெரிவதை மக்கள் உணர்ந்துவிட்டனர் . விலைவாசி, மொர்பி பால விபத்து என பெரிய பட்டியலை பாஜகவினர் மறைத்தாலும் பொதுமக்கள் தெளிவாக உள்ளனர். இனி குஜராத்தில் பாஜகவுக்கு இறங்கு முகம் தான். பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியோ, இந்திய அரசியலில் புதுமையை புகுத்துகிறது என கூறும் அக்கட்சியின் நிர்வாகிகள், புதுடெல்லி, பஞ்சாப் அடுத்து குஜராத்திலும் வென்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மொத்தமுள்ள 182 இடங்களில் கடந்த முறை பாஜக 49.05 சதவீத வாக்குகளுடன் 99 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. கடுமையாக போராடிய காங்கிரஸ் 41.44 சதவீத வாக்குகளுடன் 77 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. பாரதிய பழங்குடி மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் வென்றனர் .

பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தான் அமரும் என்றும், ஆம் ஆத்மி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றன. இந்த கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜக சார்பான கணிப்புகள் என காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூறுகின்றன.

குஜராத் மாநிலத்தில் சென்ற தேர்தலில் 2 சதவீத வாக்குகள் (எண்ணிக்கையில் 5 லட்சம் வாக்குகள்) நோட்டாவுக்கு பதிவாகியது குறிப்பிடதக்கது. இன்னுமொரு அம்சமாக இலவசம் நாட்டை பின்னுக்கு தள்ளுகிறது வளர்ச்சிக்கு தடைக்கல் என கூறிய பிரதமர் மோடி கூட, குஜராத் தேர்தலில் மக்களின் முன்னேற்றத்திற்கு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கும் நிலை ஏற்பட்டது இந்த தேர்தலில் தான். இலவச கல்வி, மின்சார ஸ்கூட்டர், பசுவுக்கு நிதி, பேருந்து பயணம், மின்சாரம் என பல சலுகைகள் வாக்குறுதிகள் நீண்டது. இது என்ன குஜராத் மாடல் என்பது, திராவிட மாடலின் மறு பரிமாணமா? என்ற வகையில் தேர்தல் களம் தென்பட்டது.

பாஜகவின் தொடர்ச்சியான வெற்றியா, ஒரு தலைமுறைக்கு பின் காங்கிரஸ் ஆட்சியா , புது வரவான ஆம் ஆத்மிக்கு ஹாட்ரிக் வெற்றியா.. குஜராத் மக்களின் தீர்ப்பை டிசம்பர் 8 ஆம் தேதி தெரியும்.

  • ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்


source https://news7tamil.live/gujarat-assembly-elections-who-will-win.html