3 11 2022
குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 1ம் தேதி, 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொள்ள தொடங்கியுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி குஜராத் சென்றிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலும் பரப்புரை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குஜராத் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், “குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசுத்துறைகளின் பணிகளை ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்த 3 லட்சம் பேருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
இதில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, 100 யுனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளால் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டவை. இதனையே குஜராத்தில் காங்கிரஸும் பின்பற்றியுள்ளது.
source https://news7tamil.live/gujarat-assembly-elections-congress-promises.html