31 10 2022
சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேலாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 2021- 2022ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியை வேளாண் பணிகளுக்கு திறம்பட பயன்படுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். இந்த AC மற்றும் DC பம்புசெட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிப்பு செய்வதுடன், காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/surya-shakti-pumpsets-project-tamil-nadu-government-invites-farmers-to-benefit.html