சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளிக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
source https://news7tamil.live/continued-heavy-rain-holidays-for-schools-in-8-districts-including-chennai-thiruvallur.html