11 12 2022
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல் குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1,5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 2 மாநிலங்களில் பதிவான வாக்குகளும் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கவும், இமாச்சலத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது என்ற அளவில் இந்த முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் வெற்றி இது. பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் தொடங்கிய பிறகு காங்கிரஸ் அடைந்த முதல் வெற்றி.
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு இந்த இரண்டு மாநிலங்களும் தேர்தலை சந்தித்தன. குஜராத் மாநிலம், மத்திய அரசின் அதிகார மையங்களான மோடி, அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் பாரதிய ஜனதா மிகக் கடுமையாக களத்தில் வேலை செய்து குஜராத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக ஆட்சி என்ற முந்தைய மேற்கு வங்க கம்யூனிஸ்டுகளின் சாதனையை பாரதிய ஜனதா இந்த வெற்றியின் மூலம் சமன் செய்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கிய ராகுல் காந்தி குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. அதே நேரத்தில் ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டமும் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு மாநில தேர்தல்களுக்கு முன்பாக நடைபெற்ற டெல்லி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 12 சதவீத வாக்குகளை பெற்றது, அதற்கு முன்பு நடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 4.3% பெற்றிருந்த காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியதற்கு பாரத் ஜோடா யாத்திரையும் ஒரு காரணம்.
குஜராத் மாநில தேர்தல் வேலைகளை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் முன் நின்று செய்தார். இமாச்சலப் பிரதேச காங்கிரசை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் வழிநடத்தினார். 40 இடங்களுடன் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். ஆட்சியில் இருந்த பா.ஜ.க-வை விட காங்கிரஸ் 15 இடங்களை அதிகம் பெற்றிருந்தாலும் காங்கிரஸ் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே அதிகம் பெற்றுள்ளது. குஜராத் தேர்தலில் 10-க்கும் அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இமாச்சலப் பிரதேசத்தில் மிகக் குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது.
இரண்டு மாநில தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் இரண்டு முக்கியமான காரியங்களை செய்தது. ஒன்று ராகுல் காந்தி அகில இந்திய பாத யாத்திரையை தொடங்கியது. மற்றொன்று, காங்கிரஸ் தலைவர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது. காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என காங்கிரசிற்கு உள்ளேயே குரல்கள் எழுந்தன. அதிருப்தியாளர்களில் ஒரு சிலர் காங்கிரஸில் இருந்து வெளியேறினர். காங்கிரஸ் தலைமை தேர்தலை அறிவித்தது. அசோக் கெலாட் விஷயத்தில் எதிர்பாராத குளறுபடியையும் பின்னடைவையும் காங்கிரஸ் சந்தித்தது.
பலரும் எதிர்பாராத விதமாக கார்கே காந்தி குடும்பத்தின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து சசிதரூர் மனு தாக்கல் செய்தார். இருவரும் தென்மாநிலங்களை சார்ந்தவர்களாக அமைந்தது தற்செயலான நிகழ்வு. அதிருப்தியாளர்கள் எதிர்பார்த்தபடியே இறங்கி வந்தனர், கார்கே பெரு வெற்றி பெற்றார். 150 நாட்கள் நடை பயணத்தை திட்டமிட்டு கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த ராகுல் காந்தி இரண்டு மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகக் குறைவான நேரத்தையே ஒதுக்கினார்.
இரண்டு மாநிலத் தேர்தல்களை விட கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் சோனியா காந்தியும், மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து அவர்களோடு உரையாடுவதில் ராகுல் காந்தியும் ஆர்வம் காட்டினர். இரண்டுமே தில்லி மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலில் பலன் அளித்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் போன்ற நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சி குறுகிய கால பலன்களை தாண்டி நீண்டகால நோக்கத்துடன் முன்னெடுத்த அரசியல் இமாச்சலப் பிரதேச வெற்றிக்குப் பிறகும் கை கொடுக்கிறது. வெற்றி பெற்ற 40 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் முதலமைச்சராக ஆசைப்பட்டனர். இறுதியாக 3 பேர் போட்டியில் இருந்தனர்.
இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மனைவி பிரதீபா சிங், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சார குழுவின் தலைவருமான சுக்விந்தர் சிங் சுகு, கடந்த சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி ஆகிய மூன்று பேருக்கு இடையே முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக இருந்தது.
காங்கிரஸ் தனது மேலிட பார்வையாளரை அனுப்பி மிக எளிதாக மூவரில் சுக்விந்தர் சிங் சுகுவை முதல்வராகவும், அக்னிகோத்திரியை துணை முதலமைச்சர் ஆகவும் தேர்வு செய்துள்ளது. இந்த முடிவை தான் மனப்பூர்வமாக ஏற்பதாக பிரதீபா சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸின் உட்கட்சி குழப்பங்கள் வழக்கத்திற்கு மாறாக விரைவாக தீர்த்து வைக்கப்பட்டது. நேரடி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை வலிமையாக கட்டுப்படுத்துகிற இடத்தில் காந்தி குடும்பத்தினர் இருக்கின்றனர்.
மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் மூவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் காங்கிரசை வழிநடத்த தயாராகின்றனர். சிறிய மாநிலமாக இருந்தாலும் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றி காங்கிரஸிற்கு இந்த நேரத்தில் தேவையான ஒற்றுமையையும், வலிமையையும் தந்துள்ளது.
எழுத்து: அரியகுளம் பெருமாள் மணி – கட்டுரையாளர், அரசியல் விமர்சகர்
source https://tamil.indianexpress.com/opinion/ariyakulam-perumal-manis-view-on-himachal-padresh-congress-victory-556411/