14 12 2022
திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று முன் தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சராக பதவியேற்கும் நிகழ்விற்கு செல்வதற்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து அங்கிருந்து பதவியேற்பு விழா நடைபெறும் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா, கனிமொழி என குடும்பத்தினர் சகிதம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு சென்றார்.
அதனைத் தொடர்ந்து சரியாக 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என தொடங்கி பதவியேற்றார். சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றையும் கொண்டிருப்பேன் என உதயநிதி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் மேடையிலேயே முதலமைச்சர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தொரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
source https://news7tamil.live/udhayanidhi-stalin-took-over-as-minister.html