சனி, 3 டிசம்பர், 2022

சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

 தஞ்சையில் சம்பா பயிர்களை பிடுங்கி அகற்றிவிட்டு, வயலில் மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து, மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கருப்புக் கொடியுடன் சென்று விளைநிலங்களை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறி, சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விவசாயிகளை தரதரவென இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் மற்ற விவசாயிகள் அவர்களை தடுத்து, விவசாயிகளை மீட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகளை கலைத்து, வயலில் வளர்ந்திருக்கும் நெற்பயிர்களை பிடுங்கி அகற்றிவிட்டு, மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சம்பா பயிர்களை அழித்து, சாலை அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டமும் நீடித்து வருகிறது.


source https://news7tamil.live/construction-of-road-by-samadhi-of-samba-farmers-protest.html