உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தி வரும் கத்தார் நாட்டையே திருவிழ கோலமாக்கியுள்ளனர் தமிழர்கள். இதுகுறித்த விரிவாகப் பார்க்கலாம். 15 12 2022
source https://news7tamil.live/qatar-world-cup-celebrations-in-full-swing-by-tamils.html
உலக மக்கள் தொகையில் சுமார் 350 கோடி பேர் கால்பந்து போட்டிக்கு ரசிகர்களாக உள்ள நிலையில், கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து கால்பந்து ரசிகர்களின் மொத்த கவனமும் அந்நாட்டின் மீது திரும்பியது. கால்பந்து போட்டி தொடங்கிய நாள் முதல் பல்வேறு நாட்டினரும் தங்களது அணியினரின் ஆட்டத்தைக் காணவும், உற்சாகமளிக்கவும் கத்தாருக்கு படையெடுத்தனர். அதேநேரத்தில், தங்களது ஆதர்ச அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ரசிகர்களின் கொண்டாட்ட நிலையை தடம் பிறழாமல் பார்த்துக் கொண்டவர்கள் கத்தார் வாழ் தமிழர்கள் தான்.
தமிழர்களுக்கே உரிய பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் ஒருங்கிணைத்து கத்தார் வீதிகளை வண்ணமயமான திருவிழாவாக மாற்றி அசத்தியுள்ளனர் கத்தார் வாழ் தமிழர்கள்.
கத்தாரில் வாழ்ந்தாலும் தமிழர்களின் வீரம் சளைத்ததல்ல என்பதை பறைசாற்றும் வகையில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஆண், பெண் பேதமின்றி சிலம்பம் சுற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு புலியாட்டம், ராவணன் ஆட்டம் உள்ளிட்ட கலைகளையும் கண்முன் நிறுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் இந்தியா விரைவில் கால்பந்து விளையாட்டிலும் கொடிகட்டிப் பறக்கும் என நம்பிக்கை தெரிவிக்கும் அவர்கள், அப்படி இந்திய அணி களமிறங்கும் நேரத்தில் இந்த கொண்டாட்டங்கள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
கத்தார் கால்பந்து போட்டி கொண்டாட்டங்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு மீண்டும் தாய் மண்ணின் வாசனையை நுகரச் செய்துள்ளன. அதுமட்டுமில்லாமல் குடும்பத்தினரை பிரிந்து வாழும் தொழிலாளர்களும், சொந்த ஊர் திருவிழாவில் பங்கேற்ற திருப்தியை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
எங்கு சென்றாலும் தமிழர்களின் தனித்துவம் மாறாது என்பதை நிரூபித்த கத்தார் வாழ் தமிழர்களின் இந்த கொண்டாட்டம் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னொரு மணிமகுடமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
– அன்சர் அலி, முதன்மைச் செய்தியாளர், நியூஸ்7 தமிழ்.