வெள்ளி, 16 டிசம்பர், 2022

நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

 15 12 2022

வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அவரும் அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், லோகேஷ் உள்ளிட்ட 4 மீனவர்களும், முனீஸ்வரன் என்பவருடைய பைபர் படகில் முகுந்தன் உள்ளிட்ட 4 மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஏழு பேர், இரண்டு ஃபைபர் படகுகளில் வந்து, தமிழக மீனவர்களது படகில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 900 கிலோ வலைகளை வெட்டி எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து இன்று காலை புஷ்பவனம் மீனவர்கள் கரை திரும்பியபின், இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவற்படை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


source https://news7tamil.live/sri-lankan-pirates-looted-nets-worth-rs-4-lakh-in-the-middle-sea.html