செவ்வாய், 31 ஜனவரி, 2023

வி.சி.க பேரணி; திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

 30 1 2023

போலீஸ் நிலையத்தை அதிர வைத்த வி.சி.க பேரணி; திருமாவளவன் அதிரடி நடவடிக்கை
ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஓன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் மீது சின்னக்கண்ணு என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் வரவில்லை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின் விசாரணைக்கு வந்த பாஸ்கரன், என்னையே விசாரணைக்கு அழைப்பீர்களா என காவல்நிலையத்தில் இருந்த எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசி, அவரின் சாதி பெயரை கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், ஜன.9ஆம் தேதி பகலவன், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஜன.26ஆம் தேதி இருவருக்கும் ஜாமின் கிடைத்தது. வேலூர் சிறையில் இருந்து வந்த இருவருக்கும் விசிகவினர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பேரணி அனுமதியின்றி காவல் நிலையம் அருகே வந்தது. அப்போது, மாவட்ட செயலாளர் பாஸ்கரன் காவல் துறைக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கோஷமிட்டனர்.

இந்தக் கோஷம் காவல் துறையினரின் மாண்பை குறைக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பகவலன் தலைமறைவாகிவிட்டார்.
அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்னன. இதற்கிடையில், பகலவனை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திருமாவளவன் எம்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pagalavan-suspended-from-the-viduthalai-siruthaigal-party-585054/