சனி, 14 ஜனவரி, 2023

ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம்.. தடையை மீறிய வி.சி.க. தொண்டர்கள்.. தொல். திருமாவளவன் கைது

 13 1 2023

தமிழ்நாடு சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன.9) ஆளுனர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது மு.க. ஸ்டாலின் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுனர் முழுமையாக படிக்கவில்லை.

திராவிட மாடல், முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை தவிரித்துவிட்டார் என்ற குற்றஞ்சாட்டு எழுந்தது.

முன்னதாக சட்டப்பேரவையில் திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆளுனர் ஆர்.என். ரவிக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனால் உரை நிகழ்த்தும்போதே ஆளுனர் அர்.என். ரவி அதிருப்தியிலே காணப்பட்டார்.

மேலும் ஆளுனர் உரைக்கு பதிலுரைக்கும்போது, மு.க. ஸ்டாலின் ஆளுனர் உரையில் தவிர்த்த சில வார்த்தைகளை எடுத்துப் பேசினார். மேலும் ஆளுனருக்கு எதிராக உரையாற்றியதுடன் தீர்மானமும் கொண்டு வந்தார்.

இது பரபரப்பை கூட்டிய நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே, பேரவையில் இருந்து வெளியேறிவிட்டார். இது மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்த விசிக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

இதற்கிடையில் சின்னமலை பகுதியில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தடையை மீறி விசிகவினர் திரளாக வந்திருந்தனர். தொடர்ந்து கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

ஆளுனரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளன. ஆளுனரை திரும்ப பெற வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்திவருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-arrested-for-trying-to-lay-siege-to-raj-bhavan-in-chennai-576029/