புதன், 25 ஜனவரி, 2023

புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள்

 24 1 2023

புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை தகனம் செய்ய இடமில்லாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மனைவி பார்வதியம்மாள். 70 வயதான இவர், குடும்பத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்லாக்கோட்டைக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் பார்வதியம்மாள் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்தில் இடம் கோரினர். ஆனால் பார்வதியம்மாள், மாற்று சமூகத்தைச் சார்ந்தவர் என்று சொல்லி, தங்கள் சமூகத்துக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள மயானத்தில், அவரது உடலை அடக்கம் செய்ய அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பார்வதியம்மாளின் சமூகத்தில், அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பம் அவரது குடும்பம் மட்டுமே.

இதனால், பார்வதியம்மாளின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து, பார்வதியம்மாளின் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்து தரக் கோரி சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள், பார்வதியம்மாளின் உடலை அடக்கம் செய்ய, புறம்போக்கு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். சாதிய பாகுபாடுகளை களைந்து, அனைவரும் ஒன்று என்ற மனநிலையை மனிதர்கள் பெற வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மாற்று சாதியினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்கத் தயங்கும் மக்களின் இந்த செயல் கவலை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.


source https://news7tamil.live/caste-discrimination-continues-in-pudukottai-people-who-are-reluctant-to-give-space-even-in-graveyards-to-people-from-other-communities.html