19 1 2023
டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது குடி போதையில் கார் ஓட்டுநர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்விட் செய்துள்ளார்.
கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா (47) டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு காயப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சாலையில், மது போதையில் இருந்த கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திராவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும் மது போதையில் கார் ஓட்டிய அந்த நபர் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவாலின் கை கார் ஜன்னல் மாட்டிக்கொள்ள 10-20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா (47) பாலியல் துன்புறுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.11 மணியளவில் தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பலேனோ காருக்குள் இருந்த ஒரு நபர் ஒரு பெண்ணை தகாத சைகை செய்து அழைத்ததோடு அந்த பெண்ணை சாலையில் இழுத்துச் சென்றதாக போலீசாரிடம் புகார் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி தெற்கு பகுதி துனை போலீஸ் கமிஷனர் சந்தன் சௌத்ரி கூறுகையில், “எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெண் இழுத்துச் செல்லப்பட்டதாக சம்பத்தைப் பார்த்த ஒருவரிடம் இருந்து எங்கள் சிறப்பு ரோந்து வாகனத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு பிறகு, அந்த பெண் சுவாதி மாலிவால் என்று அடையாளம் காணப்பட்டார்… மது போதையில் பலேனோ கார் ஓட்டிச் சென்ற நபர், அவர் அருகில் நிறுத்தி, தவறான எண்ணத்துடன் உள்ளே வந்து உட்காரச் சொல்லியிருக்கிறார். அவர் மறுத்ததால், அங்கிருந்து சென்ற அந்த நபர், மீண்டும் திரும்பி வந்து அவரை காரில் உட்காரச் சொல்லியிருக்கிறார். அவர் மீண்டும் மறுத்திருக்கிறார். அவர் அந்த நபரைக் கண்டிக்க கார் அருகே சென்றபோது அந்த கார் டிரைவர் வேகமாக கார் ஜன்னலை மூடி இருக்கிறார். அதில் அவருடைய கை சிக்கிக்கொண்டது… அப்போது அவர் 10-15 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
அதிகாலை 3.12 மணியளவில், டெல்லி காவல் கட்டுப்பாட்டு அறை இந்தஅ சம்பவம் குறித்த செய்தியைத் தெரிவித்தது. போலீசார் உடனே காரைக் கண்காணிக்கத் தொடங்கினர். அதிகாலை 3.15 மணியளவில், கோட்லா முபாரக்பூரிலிருந்து வந்த போலீசாரிடம் காவல் கட்டுப்பாட்டு அறை குழு காரைக் கண்டுபிடிக்கச் சொன்னது. அதிகாலை 3.20 மணியளவில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏசிபியும் சம்பவ இடத்துக்கு வந்தார். அதிகாலை 3.34 மணியளவில், காரை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவாலின் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். “நாங்கள் அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக புகாரை பெற்றுள்ளோம். கார் ஓட்டுநரும் புகார்தாரரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று டி.சி.பி சந்தன் சௌத்ரி கூறினார்.
இந்த சம்பவம் நடந்தபோது சுவாதி மாலிவால் தனது குழுவுடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு, டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போடு ஒரு கார் டிரைவர், போதையில், என்னைத் துன்புறுத்தினார். நான் அவரைப் பிடித்தபோது, அவர் கார் கண்ணாடியில் என் கையை மாட்டி என்னை இழுத்துச் சென்றார். கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார்… டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவர் பாதுகாப்பாக இல்லை என்றால், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 341 (தவறான நடத்தை), 354 (பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சக்தியைப் பிரயோகிப்பது), மற்றும் 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட செயல்) என இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/dcw-chief-swati-maliwal-molested-dragged-by-drunk-driver-579075/