15 1 2023
சீனாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. மேலும் இதுதொடர்பான தகவல்களை சீனா மறைத்துவருவதாக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கைவிட்டதிலிருந்து கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டு 60,000 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக சீன சுகாதார ஆணையத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இதன்மூலம் இறப்பு எண்ணிக்கையை முதன்முறையாக சீனா நேற்று வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு காரணமாக 5000 பேரும் கொரோனா உடன் இணை நோய்கள் காரணமாக கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேரும் இறந்துள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதால் கொரோனா பரவல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக வைரஸ் குறித்து கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுள்ளது.
சீன அதிகாரிகள் மருத்துவமனை விவரங்கள், நோயாளியின் விவரங்கள், இறப்பு எண்ணிக்கை ஆகியவை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனா வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
source https://news7tamil.live/who-urges-china-to-share-more-covid-info-after-it-reports-huge-spike-in-deaths.html