செவ்வாய், 17 ஜனவரி, 2023

சுதந்திரமான நீதித்துறைக்கு விஷ மாத்திரை’ : ரிஜிஜூ கடிதத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

 16 1 2023



‘சுதந்திரமான நீதித்துறைக்கு விஷ மாத்திரை’ : ரிஜிஜூ கடிதத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வும் செய்யும் கொலிஜியம் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதினார். ரிஜிஜூவின் கடிதத்தையடுத்து, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய அரசு நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது எனவும் விமர்சனம் செய்தனர்.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், சுதந்திரமான அரசியலமைப்பு அமைப்புகளை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறது. மேலும், நீதித்துறை மீதான ரிஜிஜூவின் தொடர்ச்சியான தாக்குதல்கள், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை ரத்து செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தை துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் விமர்சனம் செய்தது மற்றும் கேசவானந்த பாரதி வழக்கைப் பற்றிய குறிப்பு ஆகியவை நீதித்துறையை மிரட்டும் ஒரு பெரிய திட்டத்தின் பகுதியாகும் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

துணை ஜனாதிபதியின் தாக்குதல்கள், சட்ட அமைச்சரின் தாக்குதல் இவை அனைத்தும் நீதித்துறையை மிரட்டி, பின்னர் அதை முழுமையாக கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ஆகும். கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை. ஆனால், இந்த அரசு முழுமையாக அடிபணிவதை விரும்புகிறது. இது ஒரு சுதந்திரமான நீதித்துறைக்கு விஷ மாத்திரை” என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஆபத்தான நடவடிக்கை

ரிஜிஜூ கடிதத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ரிஜிஜுவின் இந்த ஆலோசனை அதிர்ச்சியடையச் செய்தது என்று கூறியுள்ளது. ஆர்ஜேடி தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான மனோஜ் குமார் ஜா கூறுகையில், “இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. இது நீதித்துறையின் சுதந்திரம் என்ற எண்ணத்தை சீர்குலைக்கிறது. அரசியலமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் சமநிலையை சீர்குலைக்கும்” என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது ஆபத்தான நடவடிக்கை என்று கூறினார். “இது மிகவும் ஆபத்தானது. நீதிபதிகள் நியமனங்களில் அரசின் தலையீடு முற்றிலும் இருக்கக் கூடாது” என்று அவர் ட்விட் செய்துள்ளார்.

1993 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கின் விளைவாக கொலீஜியம் அமைப்பு நடைமுறைக்கு வந்தது. தேசிய நீதிபதிகள் நியமனம் ஆணையம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் விருப்பத்திற்கு இடமளிக்க விரும்பினாலும், அவர்கள் எப்படி அதைச் செய்வார்கள், நடைமுறைக் குறிப்பில் அத்தகைய இடங்களுக்கு இடமில்லை. அப்படியானால், அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டும் ஏன்? என்று காங்கிரஸ் மக்களவை எம்.பி மணீஷ் திவாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/poison-pill-for-independent-judiciary-oppn-slams-govt-over-rijiju-letter-to-cji-577399/