திங்கள், 23 ஜனவரி, 2023

பி.பி.சி ஆவணப்படத்தின் இணைப்புகள் நீக்கம்: ‘தணிக்கை’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

 22 1 2023

2002 குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி ஆவணப்படத்தில் அப்போதைய முதலமைச்சர் பிரதமர் மோடி குறித்து குற்றஞ்சாட்டி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக லிங்க்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் குற்றஞ்சாட்டினர். குஜராத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த மோடி மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சி குஜராத் கலவரம் தொடர்பாக ‘India: The Modi Question’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டது. 2 பாகங்களாக எடுக்கப்பட்ட ஆவணப் படத்தின் முதல் பாகம் வெளியானது. அதில், பிரதமர் மோடிக்கு எதிராகவும், கலவரத்தை தடுக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தின் லிங்க்குகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

தணிக்கை எனக் குற்றச்சாட்டு

இந்நிலையில், இந்த ஆவணப்படம் , இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துவதாகவும், இந்தியாவுடனான உலக நாடுகளின் நட்புறவு, பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கூறி ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதள லிங்க்குளை நீக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், இரண்டு பாகம் கொண்ட ஆவணப்படத்தின் முதல் எபிசோடு வீடியோக்களை நீக்க யூடியூப்பிற்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தொடர்ந்து எபிசோடிற்கான இணைப்புகளைக் கொண்ட 50-க்கும் மேற்பட்ட ட்விட்டர் பதிவுகளையும் நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். “தணிக்கை” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திரிணாமுல் எம்.பி டெரெக் ஓ. பிரையன் கூறுகையில், “பி.பி.சி ஆவணப்படத்தின் லிங்க்குடன் நான் செய்த ட்விட் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. ஆனால் ட்விட் நீக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தணிக்கை செயல். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமரும் அவருடைய ஆதரவாளர்களும் அவரைப் பற்றிய பி.சி.சி ஆவணப்படத்தை அவதூறானது என்று கூறுகின்றனர். தணிக்கை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க ஏன் பிரதமர் வாஜ்பாய் 2002ல் வெளியேற விரும்பினார்? வாஜ்பாய் ஏன் அவருக்கு ராஜதர்மத்தை நினைவுபடுத்தினார்?” என்று பதிவிட்டுள்ளார்.

அவதூறு பரப்பும் முயற்சி

திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, பிபிசி நிகழ்ச்சியை இந்தியாவில் யாரும் பார்த்து விட கூடாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் போர்க்கால நடவடிக்கையில் உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/documentary-on-2002-gujarat-riots-govt-orders-youtube-twitter-to-block-bbc-film-on-modi-opposition-says-censorship-580236/