மாநில ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் கருத்துமோதல்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. அந்த சம்பவங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவை கடந்த ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் கூடியபோது, அந்த அவை அதற்கு முன்பு கண்டிராத சில சம்பவங்கள் அரங்கேறின. அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை படிக்காமல் தவிர்த்து சில புதிய வாக்கியங்களை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி படித்தது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசு தயாரித்த ஆளுநர் உரையே அவைக் குறிப்பில் பதிவாகும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தேசியகீதம் பாடப்படும் முன்பே அவையைவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அரசு தயாரித்த அறிக்கையை முழுமையாக படிக்காமல் விட்டதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநர் உரைகளின்போது சர்ச்சைகள் ஏற்படுவது பிற மாநிலங்களிலும் அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 2020ம் ஆண்டு ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சம்பவம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. கேரளாவில் நடைபெற்று வரும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம்தேதி கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்துக்கொடுத்த ஆளுநர் உரையை வாசித்துகொண்டிருந்த ஆரிப் முகம்மதுகான் 18வது பத்தியை படிப்பதற்கு முன்பாக ஒரு நிமிடம் உரையை நிறுத்தினார். ”இப்போது நான் வாசிக்கப்போகும் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அரசின் கொள்கை மற்றும் திட்டங்களோடு தொடர்புடையது அல்ல என்பதால் இதனை வாசிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது குறித்து முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். ஆனால் அந்த கருத்து அரசினுடைய பார்வை எனக் கூறினார். எனவே இந்த பத்தியை வாசிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், முதலமைச்சரின் விருப்பத்திற்காக இந்த பத்தியை வாசிக்கிறேன்” எனக் கூறிவிட்டு குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் அந்த 18வது பத்தியை வாசித்தார் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மதுகான். அரசு தயாரித்த உரையை விமர்சித்த அவரது நடவடிக்கைக்கு கேரள அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே கேரள மாநிலத்தில் கடந்த 1969ம் ஆண்டு ஜனவரி மாதம், இ.எம்.எஸ். நம்புதிரிபாடு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தயாரித்த ஆளுநர் உரையில் மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்து காணப்பட்ட சில பகுதிகளை ஆளுநர் விஸ்வநாதன் படிக்காமல் புறக்கணித்துள்ளார். அப்போது அவையில் எழுந்து நின்ற முதலமைச்சர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, விடுபட்ட பகுதியை ஆளுநர் படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவையில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆளுநர் விஸ்வநாதன், அந்த பகுதியை அவையில் படிக்க மாட்டேன் என ஏற்கனவே முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக கூறினார்.
2001ம் ஆண்டு ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் அரசு கேரளாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஆளுநர் சுக்தேவ் சிங் காங், ஆளுநர் உரையில் சில பகுதிகளை படிக்காமல் விட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2018ம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சிக்கும் பத்தியை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டதற்கும் ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு திரிபுரா சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போதும், இது போன்ற சர்ச்சை எழுந்தது. அப்போது திரிபுராவில் இடதுசாரி முன்னணி அரசு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசு தயாரித்த ஆளுநர் உரையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக இருந்த பத்தி உள்பட இரண்டு பத்திகளை ஆளுநர் டாதாகதா ராய் படிக்காமல் புறக்கணித்தார்.
1969ம் ஆண்டு மேற்குவங்கத்தில் இந்த விஷயத்தில் ஒரு வித்தியாசமான சூழல் சட்டப்பேரவையில் நிலவியது. 1967ம் ஆண்டு மேற்குவங்கத்தில் அஜய்குமார் முகர்ஜி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அமைந்தபோது, அம்மாநில ஆளுநராக இருந்த தர்ம வீரா அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மேற்கு வங்க ஐக்கிய முன்னணி அரசை அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு கலைத்தது. பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய முன்னணி வென்று மீண்டும் மேற்குவங்க முதலமைச்சர் ஆனார் அஜய் குமார் முகர்ஜி. அப்போது ஆளுநர் உரையுடன் மேற்குவங்க சட்டப்பேரவை கூடியபோது, முன்பு அஜய்குமார் முகர்ஜி அரசை மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற வாசகத்தை ஆளுநர் உரையில் இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசு சேர்த்திருந்தது. முதலாவது ஐக்கிய முன்னணி அரசை கலைப்பதற்கு பரிந்துரை செய்தவரே தர்ம வீராதான். இதனால் தமது நடவடிக்கையை விமர்சிக்கும் வாசகத்தை தாமே சட்டப்பேரவையில் வாசிக்க வேண்டிய சூழல் ஆளுநர் தர்ம வீராவிற்கு ஏற்பட்டது.
ஆனால், அந்த குறிப்பிட்ட பத்தியை படிக்க மறுத்தார் தர்ம வீரா. அந்த பத்தியை படித்தே ஆக வேண்டும் என முதலமைச்சர் அஜய் குமார் முகர்ஜி எவ்வளவோ வலியுறுத்தியும் அந்த பத்தியை படிக்க ஆளுநர் தர்ம வீரா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆளுநர்களுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு காலங்காலமாக தொடர்ந்து வரும் நிலையில் இந்த விவகாரத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
-எஸ்.இலட்சுமணன்
source https://news7tamil.live/governors-speeches-controversies-in-state-assemblies.html