சனி, 14 ஜனவரி, 2023

திருமாவளவனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு; காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

 13 1 2023

திருமாவளவனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு; காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவக்கத்திற்கு சென்ற தன்னை கட்சி அலுவலகத்தில் இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக, சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மே 28-ம் தேதி புகார் அளித்தார்.

வேதா அருண் நாகராஜன் அளித்த புகாரில், தன்னையும், தனது மனைவி குழந்தைகளை தாக்கிய அவர்கள், தங்களிடம் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை பறித்துச் சென்றதாகவும், இந்த தாக்குதலுக்கு திருமாவளவன் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. பின்னர் இந்த வழக்கு, வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வேதா அருண் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகரன் முன்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், முதலில் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குபின், வேளச்சேரி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சம்மந்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், வழக்கின் விசாரணை நிலை குறித்தும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-hc-order-to-police-to-submit-status-report-about-attempt-to-murder-case-against-thirumavalavan-576080/