திங்கள், 16 ஜனவரி, 2023

திருச்சியில் வீடுதோறும் தமிழ்நாடு ட்ரெண்டிங் செய்த பெண்கள்

15 1 2023

திருச்சியில் வீடுதோறும் தமிழ்நாடு ட்ரெண்டிங் செய்த பெண்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாள் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரம் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தங்கள் இல்லங்களின் முன் கோலமிட்ட பெண்கள் ‘தமிழ்நாடு வாழ்க’ என்று மாக்கோலம் இட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சியிலும் பெரும்பாலான இடங்களில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்று கோலமிட்டு பெண்கள் ட்ரெண்டிங் ஆக்கியிருக்கின்றனர். இது குறித்த விபரம் வருமாறு: ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவில் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு எனவே தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று பேசினார்.

இதுதொடர்பாக, ஆளுநருக்கு எதிராக திமுகவினர் உள்பட தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்தனர். இது ஆளுநர் உரையிலும் எதிரொலித்தது. இதனிடையே திமுகவினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து மடல் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் தமிழ்நாடு வாழ்க எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று வேண்டுகோள் வைத்தார்.

இதனை அடுத்து திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது வீட்டில் முன்பு வண்ண கோலங்களில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகம் எழுதி பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றார்.

சமீபகாலமாக தமிழ்நாடு என்ற சொல் அரசியலாக்கபட்டு வந்த நிலையில் வண்ண கோலங்களில் தமிழ்நாடு வாழ்க என வண்ண கோலங்களால் வரைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதேபோல், திருச்சி அல்லித்துறையில் பொதுமக்கள் இன்று குடும்பம் குடும்பமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.

குறிப்பாக, தங்கள் இல்லம் முன்பு வண்ண கோலங்கள் வரைந்து, புத்தாடைகள் அணிந்து, மண் பானை பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பொங்கல் பொங்கி வரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொங்கலோ பொங்கல் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சூரிய பகவானை வழிபட்டனர்.

சமீபகாலமாக தமிழ்நாடு என்ற சொல் டிரெண்டிங் ஆகி வருவதால், இதை குறிக்கும் விதமாகவும், தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் விதமாகவும் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் “தமிழ்நாடு வாழ்க” என்று குறிப்பிட்டு கோலம் வரைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல் 


source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-women-trending-tamilnadu-by-kolam-577026/