29 1 2023
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மின்சார வாரிய இணையதளப் பக்கத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் அனைவரும் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து நவம்பர் 28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். இணையதளம் வாயிலாக மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.26 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tneb-aadhaar-link-last-date-and-checking-website-details-here-584612/