21 1 2023
தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் சில பகுதிகளைத் தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் பேசியதால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பொங்கல் கொண்டாட்ட அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டது மேலும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் தமிழக ஆளுநர் மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி” நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கின்றேன்”.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்”, என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு – தமிழகம் என்ற சர்ச்சை இத்துடன் முடிந்துவிடும் என்று இருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்று ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறியதைக் குறிப்பிட்டு, எந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை என்று கேள்வி எழுப்பிய தி.மு.க-வின் முரசொலி நாளிதழ், இவர் பெரிய பாவாணர் என்று சாடி பைந்தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களை மேற்கோள் காட்டி அளுநரை கடுமையாக சாடியுள்ளது.
தி.மு.க-வின் ‘முரசொலி’ நாளிதழ் ‘எப்போதும் தமிழ்நாடு வாழ்க’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு பெயர் சர்ச்சையை மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி முடித்து வைக்க நினைப்பதாகத் தெரியவில்லை. மறுபடியும் தமிழர் நெஞ்சில் நெறுப்பு மூட்டவே நினைக்கிறார். “அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்ப்து இருக்கவில்லை” என்பது அவரது புதிய அறிக்கையில் வெளிவரும் புது கண்டுபிடிப்பாக இருக்கிறது.
‘எந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை’ என்கிறார்? வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் ‘தமிழகம்’ என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடா. இவர் பெரிய பாவாணார்! கண்டுபிடித்துச் சொல்கிறார்..
எல்லாம் தெரிந்தவரைப் போல குறளுக்குத் தவறான பொருள் சொல்வதும், இப்போது ‘தமிழ்நாடே இல்லை’ என்று சொல்வதும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, இதெல்லாம் ‘தினமலர்’ வாசகர் கடிதம் எழுதும் தகுதியும், ‘துக்ளக்’ குருமூர்த்தியிடம் கேள்வி கேட்கும் தகுதியும் படைத்தவர்களுக்கு இருக்க வேண்டிய ‘அளவு’ ஆகும்.
‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய’ – என்கிறது சிலப்பதிகாரம். அதுவே ‘தமிழ்நாடு’, ‘தமிழ் நன்னாடு’ என்றும் சொல்கிறது. கவுந்தியடிகள் மதுரைக்கு செல்ல நினைத்து தனது எண்ணத்தைக் கூறும்போது, ‘தென் தமிழ் நன்னாட்டுத் தீதுநீர் மதுரைக்கு’ என்று பாடுகிறார். இந்நிலம் முழுவதையும் தமிழ்நாடாக்க விரும்பி இமயத்தில் இருந்து கல் கொண்டு வந்தான் என்கிறார் இளங்கோவடிகள். வடதிசை மன்னர்க்கு எல்லாம் மூவேந்தர் சின்னத்தையும் சேர்த்து வரைந்து அனுப்பச் சொல்கிறார் இளங்கோவடிகள். ‘தென் தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி…’ என்கிறது அந்தப் பாட்டு.
“வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காண” – என்று மதுரைக் காண்டத்தில் வருகிறது.
‘தமிழ்நாட்டகம்’ என்கிறது பரிபாடல். “தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்” என்கிறது அது.
இவர் ஏதோ, அப்போது இல்லை, இப்போது இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். காசி இருக்கும்போது தமிழ்நாடு இல்லையா? தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா அவருக்கு? மாந்த இனம் தோன்றிய இடம் குமரிக் கண்டம். மக்கள் கூட்டம் வாழும் இடத்தை நாடு என்று சொல்வது தமிழ் வழக்கு ஆகும். ‘நாடு’ என்ற சொல்லப் பார்த்ததும் எதற்காக பீதியடைகிறார்கள்? நாடு என்று சொன்னால் தனிநாடாகி விடுமா? வாய் சுட்டுவிடுமா?
சொல்லியல் செம்மல் இரா. இளங்குமரனார், ‘நாடு’ என்பதற்கு பல்வேறு பொருள் உண்டு என்கிறார். “இடம் என்பது ஒரு பொருள். இடத்தின் பரப்க்கு ஓர் அளவில்லை. சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகள் தனித்தனி நாடுகளாக விளங்கின. சில ஊர்ப்பெயர்கள் நாடு என இக்காலத்தும் வழங்கப்பெறுகின்றன. அதனால், சில ஊர்களைக் கொண்ட பகுதியும் தனியூர்களும் கூட நாடுகள் எனப் பெயர் பெற்றன என்பது விளங்கும்” என்கிறார்.
‘பாண்டி நாடே பழம்பதியாகவும்’ என்கிறது திருவாசகம்.
‘தென்னா டுடைய சிவனே போற்றி’ என்கிறது திருவாசகம்.
உயர்ந்த குறுக்கிடும் பெரிய உச்சிகளைத் தாண்டி பல மொழிகள் பேசுகின்ற நாடுகளுக்கு விரும்பிய செயலைச் செய்வதற்காக மன்னன் சென்றான்’ என்கிறது அகநானூற்றுப் பாடல். எனவே நாடு, தமிழ்நாடு என்பது எல்லாம் ‘சொல்’ தோன்றிய காலம் முதல் இருப்பவை ஆகும். எனவே, இதனை அவர் பிரச்சினை ஆக்கத் தேவையில்லை. தவறானவர்களால், தவறாக அவர் வழிநடத்தப்படுகிறார் என்பது தெரிகிறது. அவர்களை, அவர் தவிர்த்துக் கொள்வது அவருக்குமே நல்லது.
‘தமிழ்நாடு’ என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டக் காலத்தில் பெயர் சூட்டிய தலைமகன் பேரறிஞர் அண்ண அவர்கள், “ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய்த்திருநாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது.” என்று சொல்ல்விட்டுச் சொன்னார். “இந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்றார். பேரறிஞர் பெருந்தகையின் ஆட்சியாகவே இன்றும் தொடர்வதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
அவர்களுக்கு ‘நாடு’ என்ற சொல் மட்டுமல்ல ‘தமிழ்’ என்று இருப்பதும் பிடிக்கவில்லை. மொழிவழி தேசிய இனத்தின் அடையாளங்களை முடிந்தவரை அழிப்பதுதான் அவர்களது வேலைத் திட்டம் ஆகும். அதற்காகத்தான் இப்படி சொல்லம்புகளை வீசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருக்குறள் நமது அடையாளம். அது சமூகநீதியைப் பேசுகிறது. அந்த அடையாளத்தை அழித்து, அதனை சமய நூலாக ஆக்கிச் சிதைப்பது அவர்களது வேலைத் திட்டம் ஆகும்.
திராவிடம் நமது அரசியலைப் பேசுகிறது. திராவிடம் என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு என்று சொல்லி அந்த அரசியலையே கேள்விக்குள்ளாக்குவது அவர்களது திட்டம். அதே போலத்தான், ‘தமிழ்நாடு’ என்று இந்த நிலப்பரப்புக்கு பெயர் இருக்கக் கூடாது என்று நினைப்பதும் ஆகும்.
‘தமிழகம்’ என்றுதான் சொல்ல வேண்டும் என்பதற்கான விளக்கம் அளிக்க முன்வந்த ஆளுநர் அவர்கள் , ‘அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை’ என்று சொல்லி இருப்பது, அதைவிட மிகத் தவறான கருத்தாகும். இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருப்பதற்குப் பதிலாக அறிக்கை விடாமலேயே இருந்திருக்கலாம். அவரது சிந்தனையானது தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டுக்கு எதிரானதாக எவ்வளவு ஊறிப் போயிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. அதைவிட முக்கியமாக, பா.ஜ.க-வுக்கு இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் வேட்டு வைக்கவே அவர் வந்திருப்பதாகவும் தெரிகிறது” என்று முரசொலி நாளிதழ் ஆளுநரை கடுமையாக சாடியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-and-thamizhagam-row-dmk-daily-attacks-on-governor-rn-ravi-579651/