சனி, 28 ஜனவரி, 2023

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

 28 1 2023

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசுத்தரப்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.

அதனால் வழக்கை தள்ளிவைத்தால் முன்னேற்றம் காட்டப்படும் எனவும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதிக்குள் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14ம் தேதி வரை வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

source https://news7tamil.live/contempt-of-court-action-if-order-to-remove-trees-not-implemented-hc-warns.html