வியாழன், 19 ஜனவரி, 2023

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

 

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. பின்னர் இந்த மனுவில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில்,  குடியரசு தலைவரிடம் நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதால் வழக்க ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது. பிறகு இந்த வழக்கை உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தது. மேலும் நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


source https://news7tamil.live/chief-minister-mk-stalin-consults-with-officials-regarding-neet-case-in-supreme-court.html