செவ்வாய், 31 ஜனவரி, 2023

80 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன மக்கள்; அழைத்துச் சென்ற ஆட்சியர்

 30 1 2023

80 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன மக்கள்; அழைத்துச் சென்ற ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், 80 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை 200க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்களை அந்த கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்த சம்பவம் நடந்துள்ளது. கோயிலின் பூட்டை உடைத்து பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரம், பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கக் கூட்டத்தின்போது வெளிச்சத்துக்கு வந்தது, அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையில் பட்டியல் இன மக்கள் கோயில் நுழைவுக்கு வழி வகுத்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இன்று தென்முடியனூர் பட்டியல் இன மக்கள் 200-க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு, 80 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்தனர்.

தென்முடியனூர் பட்டியல் இன ஆண்கள், பெண்கள் என அனைவரும் முதல்முறையாக அவர்கள் கிராம முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட்டதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். பெண்கள் முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து படைக்க அரிசி, பாத்திர மற்றும் அம்மனுக்கு செலுத்த மாலைகளை எடுத்து சென்றனர்.

முதல்முறையாக கோயிலுக்குள்ளே சென்றதால் உற்சாகம் அடைந்த பட்டியல் இனப் பெண்கள் தொலைக்காட்சிகளில் பேசுகையில், தங்கள் நனவானதாக மகிழ்ச்சியாகக் கூறினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் கிராமத்தில் பட்டியல் இன மக்களை மாவட்ட நிர்வாகம் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிப்படச் செய்தது குறித்து ஆங்கில ஊடகங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன், “பட்டியல் இன மக்கள் சுமூகமாக கோயிலுக்குள் நுழைவதற்கு நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களது சமாதானப் பேச்சுவார்த்தை தொடரும். எனவே இது பட்டியல் இன மக்களின் அடையாள கோயில் நுழைவாக நின்றுவிடாது” என்று தெரிவித்தார்.

அதே போல, காவல்துறை டி.ஐ.ஜி டாக்டர் எம்.எஸ் முத்துசாமி கூறுகையில், “இன்னும் ஆதிக்க சமூகங்கள் எதிர்க்கிறார்கள். நாங்கள் 400 பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்துள்ளோம். இருப்பினும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்று கூறினார்.

தியாகிகள் தினமான ஜனவரி 30-ம் தேதி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை தமிழக அரசு நிறைவேற்றுகிறது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி.முருகேஷ் ஆங்கில ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கையில், “பட்டியல் சாதியினருக்கான அரசியலமைப்பு உரிமைகளை நாங்கள் உறுதி செய்துள்ளோம். 70 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இது சமத்துவ யுகம். இது போன்ற பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது. மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.” என்று கூறினார்


source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-thenmudiyanur-dalit-people-temple-entry-after-80-years-collector-police-action-585101/