அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாட்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்து விடுமுறையை வழங்க வேண்டும் எனும் குரல் பரவலாக எழுந்து வருகிறது. அந்த குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டிலேயே முதன்முதலாக மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மாநில உயர்கல்வித் துறை, இன்று பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் மாணவிகள் தங்கள் செமஸ்டர் தேர்வில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் மாணவிகள் விடுமுறை எடுப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள மாநில அரசு இத்தகைய தினங்களில் மாணவிகளின் நலன்கருதி கட்டாய விடுமுறை அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொச்சின் பல்கலைகழகத்தில் இந்த அறிவிப்பு நடைமுறையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பிந்து தற்போது அனைத்து பல்கலைகழகங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுமுறைகளுக்கான நடைமுறைகள் உள்ளன. மேலும், 1992 முதல் பீகாரில் அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சிறப்பு மாதவிடாய் விடுப்பு பெறலாம்.
21 1 2023
source https://news7tamil.live/menstrual-leave-mandatory-in-kerala-educational-institutes-lstate-govt-notification.html