ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ஒரே அறை, புத்தகங்கள் பற்றாக்குறை; ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த உடன்பிறப்புகள்

 21 1 2023

ஒரே அறை, புத்தகங்கள் பற்றாக்குறை; ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த உடன்பிறப்புகள்
(இடமிருந்து) சுஹைல் அஹ்மத் வானி சகோதரிகள் ஹுமா மற்றும் இஃப்ராவுடன் ஜம்முவில் உள்ள ஷஹபாத் காலனியில் உள்ள அவர்களது வீட்டில். எக்ஸ்பிரஸ்

Arun Sharma

வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு புது வகையான வரலாற்றை உருவாக்கி, தோடா மாவட்டத்தின் தொலைதூர கஹாரா பகுதியைச் சேர்ந்த மூன்று உடன்பிறப்புகள் மதிப்புமிக்க ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீசஸ் தேர்வில் (JKCSE) வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களில் இஃப்ரா அஞ்சும் வானி மற்றும் அவரது இளைய சகோதரர் சுஹைல் அஹ்மத் வானி ஆகிய இருவரும் தங்களின் முதல் முயற்சியில் கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அதே நேரத்தில் மூவரில் மூத்தவரான ஹுமா தனது இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார். உடன்பிறப்புகளான இந்த மூவரும் அவர்களின் குடும்பத்தில் முதல் முறையாக அரசுப் பணியில் சேர்கிறார்கள்.

சுஹைல் 111வது இடத்தையும், அதைத் தொடர்ந்து ஹுமா 117வது இடத்தையும், இஃப்ரா 143வது இடத்தையும் பெற்றுள்ளனர். சுஹைல் 2019ல் அரசு எம்.ஏ.எம் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற நிலையில், ஹுமா மற்றும் இஃப்ரா 2020ல் இக்னோவில் (இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம்) இருந்து தொலைதூரக் கல்வியில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றனர்.

இவர்களின் தந்தை முனீர் அகமது வானி லேபர் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருவதால் மாத வருமானம் ரூ.15,000-20,000 மட்டுமே கிடைக்கும், இந்த நிலையில் இந்த உடன்பிறப்புகள் 2021-ல் ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸுக்குத் தயார் செய்ய முடிவு செய்தனர். 2014-ம் ஆண்டு வரை முனீர் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்தார். முனீரின் மனைவி வீட்டு வேலை செய்பவர்.

ஜம்முவில் உள்ள பஹு கோட்டைக்கு அருகில் உள்ள திட்டமிடப்படாத ஷஹபாத் காலனியின் குறுகிய பாதையில் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் வசித்த அவர்கள் 2010 இல் மேற்படிப்புக்காக இடம் பெயர்ந்தனர், உடன்பிறப்புகள் கஹாரா மற்றும் அருகிலுள்ள கிஷ்த்வார் நகரத்திலிருந்து பள்ளிப்படிப்பை முடித்தனர். கஹாராவில் உள்ள தங்கள் மூதாதையர் வீட்டை அடைய, அருகில் உள்ள வாகனச் சாலையில் இருந்து கிட்டத்தட்ட 5 கிமீ நடந்து செல்ல வேண்டும்.

ஜம்முவில் உள்ள வீட்டை முனீர் தனது மைத்துனரும் தோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியருமான சாதிக் ஹுசைன் வானி உடன் இணைந்து வாங்கினார், இதனால் அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடிந்தது. குளிர்காலத்தில் வீட்டில் 10-12 பேரும், கோடையில் 6-8 பேரும் இருப்பதால் உடன்பிறப்புகள் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

“எங்கள் தந்தையின் சாதாரண மாத வருமானத்தைக் கருத்தில் கொண்டு, எங்களிடம் மொபைல் போன் எதுவும் இல்லை… ஒவ்வொரு பாடத்திலும் ஒரு புத்தகம் மட்டுமே இருந்தது, அதை நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது” என்று இஃப்ரா கூறினார். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையில் ஹுமா மற்றும் சுஹைலுக்கு இடையே எப்போதும் வாக்குவாதங்கள் இருந்ததாக இஃப்ரா கூறினார், அவர் அவர்களுக்கு இடையே ஒரு மத்தியஸ்தராக இருந்ததாகவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

“புத்தகங்கள், கைடுகள் மற்றும் வழிகாட்டுதலில் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம்,” என்று ஹூமா கூறினார், ஒருவர் முதலில் குறிப்புகளை உருவாக்கி, பின்னர் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ஏற்ப அவற்றைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தயாரிப்பே அதிக நேரம் எடுக்கும்.

“அல்லாஹ்வின் கிருபையால், நாங்கள் அனைவரும் இதைச் செய்துள்ளோம், தேர்வு முடிவுகளால் ஒரே நாளில் எங்களின் வாழ்க்கை மாறிவிட்டது,” என்று இஃப்ரா கூறினார்.

போலீஸ் சேவையில் சேர விரும்பிய சுஹைல், “இது நம் அனைவருக்கும் ஒரு முழுமையான யு-டர்ன்” என்று கூறினார், “இது அதிகாரம் மற்றும் பொறுப்பு இரண்டையும் தருகிறது”.

சுஹைல் ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக பணியாற்ற விரும்புகிறார், அதே நேரத்தில் அவரது சகோதரிகள் சிவில் நிர்வாகத்தில் சேர்ந்து சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு, குறிப்பாக ஆணாதிக்க மனநிலையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள்.

வெள்ளிக்கிழமை காலை ரிசல்ட் அறிவிக்கப்பட்டபோது முனீர் ரஜோரியில் இருந்தார், உடன்பிறப்புகளின் வெற்றியைப் பற்றி முதலில் அறிந்தவர் சாதிக் உசேன்.

“இந்தப் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது எனக்குக் கூடத் தெரியாது. எனது நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ்அப்பில் ரிசல்ட் அனுப்பியது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது,” என்று முனீர் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/sharing-room-books-success-3-siblings-crack-jk-civils-579803/