திங்கள், 3 ஏப்ரல், 2023

4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாணவிகள் மறுப்பு

 

3 4 23

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. நடனம் மற்றும் இசைக்கு புகழ்பெற்ற இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு இக்கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.

மேலும் ருக்மணி தேவி கலை கல்லூரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் என்பவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 5ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நான்கு பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வு எழுத கல்லூரிக்கு திரும்ப மாட்டோம் என மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/kalashetra-affair-students-refuse-to-return-to-college-until-action-is-taken-against-4-people.html