திங்கள், 3 ஏப்ரல், 2023

கர்நாடகாவில் ‘பசு பாதுகாப்பு குழு’ என்று கூறி இஸ்லாமியர் கொடூரக் கொலை!

 3.4.2023

கர்நாடகாவில், பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்கள் மீது, ‘பசு பாதுகாவலர்கள்’ என்று கூறிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சையது ஜாகீர் (40), இத்ரீஸ் பாஷா (39), இர்ஃபான் ஆகிய மூவரும் வாரந்தோறும் கர்நாடகாவில் இருந்து மாடுகளை வாங்கி, இறைச்சிக்காக தமிழ்நாடு, கேரளாவுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, இம்மூவரும் 16 மாடுகளை ஏற்றிக் கொண்டு, தமிழ்நாடு நோக்கிப் பயணித்துள்ளனர். அப்போது, கனகபுரா தாலுகா, சாந்தனூர் காவல் நிலையம் அருகே, ‘பசு பாதுகாப்புக்குழு’ என்று கூறிய கும்பல், அவர்களின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளனர். இத்ரீஸ் பாஷா, இர்ஃபான் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அங்கு வந்த போலீசார், சையது ஜாகீரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், 1-ம் தேதி காலை, அந்தப் பகுதியிலுள்ள புதர் அருகே இத்ரீஸ் பாஷா உடம்பில் தீக்காயம் மற்றும் ரத்தக் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், ‘பசு பாதுகாப்புக்குழு’ நடத்தி வரும் புனித் கிரேஹள்ளி என்பவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன், இத்ரீஸ் பாஷாவைக் கடத்திச் சென்று, கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாஷாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு சாத்தனூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.

குற்றம்சாட்டப்பட்ட கிரேஹள்ளி மற்றும் உடனிருந்த 2 பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேஹள்ளி பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என காங்கிரஸ் இந்த சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது.


source https://news7tamil.live/muslims-brutally-killed-by-claiming-to-be-a-cow-protection-group-in-karnataka.html