19 4 23
இன்னும் சில மாதங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியகம் தெரிவித்துள்ளது.
1974ம் ஆண்டு 400 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 2011ம் ஆண்டு 700 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 800 கோடியை எட்டியுள்ளது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர் சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே வசிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
142.86 கோடி மக்கள் தொகையுடன் உலகின் முதல் இடத்தில் சீனா உள்ளது. 142.57 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டின் மையப் பகுதியில் இந்தியாவின் மக்கள் தொகை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டின் நடுப் பகுதியில் சீனாவின் மக்கள் தொகையான 142.86 கோடியை இந்தியா நெருங்கி விடும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2011ல் 1.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பிறப்பு விகிதம் 2022ல் 1.7சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2021ல் எடுக்கப்பட வேண்டும். ஆனால் கோவிட் பெருந்துற்று காரணமாக இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
எகிப்து, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகள் அதிக பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளன. தற்போது இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே மக்கள் தொகையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. வெறுமனே 30 லட்சம் மக்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
அதேபோல இந்தியாவில் 0-14 வயதுள்ள குழந்தைகள் 25 சதவிகிதமும், 10-19 வயதுள்ள இளைஞர்கள் 18சதவிகிதம் பேரும், 15-64 வயதுள்ளவர்கள் 68சதவிகிதமும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7சதவிகிதம் பேரும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியகம் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/population-in-a-few-months-india-will-overtake-china-as-the-number-one.html