ஞாயிறு, 21 மே, 2023

இன்ஜினியரிங், டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு ரூ.50000; பிரகதி ஸ்காலர்ஷிப் பற்றிய முழுவிவரம் இங்கே!

 20 5 2023 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (AICTE) இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்காக வழங்கும் பிரகதி ஸ்காலர்ஷிப் பற்றிய முழுத் தகவல்களை இப்போது பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் நோடல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு என பிரத்யேகமாக பிரகதி என்ற ஸ்காலர்ஷிப்பை வழங்கி வருகிறது. இந்த ஸ்காலர்ஷிப் குறித்த முழுவிவரங்களை கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த கல்வி உதவித்தொகை பெண்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 5000 மாணவிகளுக்கு வழங்கப்படும். இதில் தமிழகத்தில் மட்டும் 800 இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கும், 700 டிப்ளமோ படிக்கும் மாணவிகளுக்கும் என மொத்தம் 1500 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு மாணவிக்கு வருடத்திற்கு ரூ. 50000 உதவித்தொகையாக வழங்கப்படும். இது நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த உதவித் தொகையை பெறத் தகுதி உடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், டிப்ளமோ படிப்பவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு முதல் வருடத்தில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். அடுத்தடுத்த வருடங்களில் முந்தைய ஆண்டு தேர்ச்சி அடிப்படையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். அரியர் வைத்தவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க www.scholarships.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/pragati-scholarships-details-for-engineering-and-diploma-girl-students-673976/

Related Posts: