7 5 23
இன்று 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைமையிலான அரசு, இதுவரை செய்த சாதனைகள் பற்றியும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புகளைப் பற்றியும் விரிவாக காணலாம்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்….” இந்த உறுதிமொழியை யாராலும் மறந்திருக்க முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சுவாரஸ்யத்தை அள்ளித் தெளித்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை மாற்றியமைத்த அந்த தேர்தல், எதிர்த்துப் போரிட்ட திமுகவுக்கு மாபெரும் வெற்றியை வழங்கியது.
திமுகவை தலைமையேற்று வழிநடத்தி வந்த மு.க.ஸ்டாலின், மே 7, 2021 அன்று தமிழ்நாட்டையும் தனது கைகளில் சுமக்க தொடங்கினார். கொரோனாவின் பிடி வலுத்திருந்த அந்த சூழ்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தலின் போது தமிழ்நாட்டு மக்களிடம் உறுதிகூறிய வார்த்தைகளை நிறைவேற்றும்வண்ணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் முதலமைச்சராக தனது முதல் முத்திரையை பதித்தார் மு.க.ஸ்டாலின்.
தந்தையின் ஆட்சியை கண்ட இந்த தமிழ்நாடு, மகனின் ஆட்சி எப்படி இருக்கும் என்று பல்வேறு எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வைத்திருந்தது. பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், புதிய பெரிய பதவியை எப்படி சமாளிப்பார் என்ற எண்ணம் சமூக வலைதளங்களிலும் அசைந்தாடிக் கொண்டிருந்தது. ஆனால் அவற்றை நிதானமாக எதிர் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மீது வீசப்படும் விமர்சனக் கற்களுக்கு தொடர்ந்து அவசர பதில்களை கொடுக்கவில்லை. மாறாக தன்னுடைய அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களிலும், ஆட்சியை நடத்துவதிலும் அதீத கவனம் செலுத்தினார்.
ஆட்சியமைத்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டில் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து திட்டம், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், அரசு தொடக்கப் பள்ளிகளில் ’முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம்’, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம் உள்ளிட்டைவை பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்ற குறிப்பிடத்தக்க திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
ரூ.4,805 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் திமுக அரசு மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டை பொருளாதாரரீதியாக உயர்த்த நினைத்த திமுக அரசு உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க இதுவரை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சரின் துபாய் பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை என தொழில் வளர்ச்சியை தமிழ்நாட்டில் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
வேளாண்மையை உற்று நோக்கிய திமுக அரசு, வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அங்கக வேளாண்மை கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு நடத்திய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். டெல்லியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் ஏற்பட்ட சலசலப்புகள் மற்றும் அசெளகரியங்களால் தான் அந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த வெளிநாட்டு வீராங்கனை ஒருவர், சென்னையால் செய்ய முடிந்தது ஏன் டெல்லியால் முடியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை முறையே செயல்படுத்தி வரும் திமுக அரசு, சில விஷயங்களில் வேகமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது மக்கள் சிலர் கூறும் வாக்கியங்களாக உள்ளன. 75 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் திமுக அரசு, மீதமுள்ள 25 சதவிகிதத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகள் தளரா நடைபோட்ட திமுக, மூன்றாம் ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு திமுகவின் மீதான் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும், வரவேற்பையும் கூடுதல் உறுதிபடுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…….
source https://news7tamil.live/dmk-govt-in-tamil-nadu-has-done-a-great-job-for-2-years-achievements-so-far.html