திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு காலம் தலைவர்கள், தொண்டர்கள் சொல்வது என்ன .? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு
’’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’’ என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பதவி ஏற்ற போது சொல்லி, நிமிர்ந்து பார்த்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பேற்றதும், மகளிருக்கு இலவச பேருந்து, உங்கள் தொகுதிகளில் முதலமைச்சர், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, திரும்பி பார்க்கவும் வைத்துள்ளார் என்கிறார்கள். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ, ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்துள்ளார். நீட் விலக்குப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளும் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளன. முக்கியமாக இது திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சரும் திமுக தலைவர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.
திராவிடல் ஆட்சி
அதாவது, ’’எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க, அனைத்து மாவட்டங்கள், சமூகங்களுக்குமான வளர்ச்சி திராவிட மாடல், தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை உள்ளிட்ட எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க கூடாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். இதுபோன்றதொரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை ஆகியவற்றில் திமுகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல என்றார் எம்.ஜிஆர். திமுகவின் தலைவராக நீண்ட காலம் இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, திமுகவைத் தொடங்கிய அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்கள் கூட அதிகம் குறிப்பிடாத திராவிட மாடல் ஆட்சி என்ற சொல்லாடலை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.
ஆளுநர் கருத்தால் சர்ச்சை
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்று ஒன்றும் இல்லை. அது ஒரு அரசியல் வார்த்தை மட்டுமே. காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க முயற்சிக்கின்றனர்’’ என்று சொன்ன கருத்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர், ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக, ’’திராவிட மாடல் தான் அனைத்து மாநிலங்களுக்குமான நிர்வாக பார்முலா. திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்கின்றனர். அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர். மேலும், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய 3 நாட்கள் மொத்தம் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்களை திமுக நடத்துகிறது.
“சாதனைத் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டலும் தீட்டப்பட்டாலும் குறைகள் உடனடியாக களையப்படுகின்றன. எங்களுக்கு வாக்களித்தவர்கள் பாராட்டும் வகையிலும் வாக்களிக்காதவர்கள் வருந்தும் வகையிலும் திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆட்சி நடத்துகிறோம்” என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பெருமிதமாக சொல்லி வருகின்றனர்.
விமர்சனங்கள்
அதேநேரத்தில், கூட்டணிக் கட்சிகளும் விமர்சிக்கும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, 12 மணி நேர வேலைக்கு அனுமதி கொடுக்கும் தொழிலாளர் நல திருத்த சட்ட முன்வடிவு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டன. முதல் முறையாக கூட்டணிக் கட்சிகளும் சட்டபேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தன. கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால், 12 மணி நேர வேலை சட்டத்திருத்தம் திரும்ப பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். இதைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
நீட் விலக்கு பெறுவோம் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் மெத்தனம், பல இடங்களில் தொடரும் லாட்டரி விற்பனை, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
தோழமை சுட்டல்
அதேநேரத்தில், கூட்டணிக்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் அண்மையில் ’தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்கிறதா? அதிகாரிகளும் முதலாளிகளும் ஆட்சி செய்கிறார்களா? அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த தீக்கதிர் நாளிதழ் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, திமுக நாளிதழான முரசொலியில் விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து டி.கே.ரங்கராஜனிடம் நியூஸ் 7 தமிழ் கேட்டதற்கு, ‘’ நான் பேசிய கருத்து தீக்கதிரில் பதிவாகியுள்ளது. அதற்கு முரசொலியில் விமர்சனம் செய்துள்ளனர். அவர்கள் என்னை விமர்சனம் செய்வது முதல் முறையல்ல.’ ’ என்றார்.
அடுத்த நாள் முரசொலியில், ’’தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளைத் திருத்தும் வகையில் அமைய வேண்டுமே தவிர, வேகமாக தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது. நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக விளங்கட்டும். ” என்றும் குறிப்பிட்டு, முற்றுப்புள்ளியும் வைத்தனர்.
அதிகாரிகள் ஆட்சியா..?
SDPI கட்சியின் மாநில மாநாட்டில், ” தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முதலமைச்சர் நினைக்கிறார். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். அரசு இயந்திரம் சரியாக செயல்பட, அதிகாரிகளின் ஒத்துழைப்பு முக்கியம். அரசை தவறாக வழி நடத்தக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் சிலரும் அதிருப்தி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ’’அதிகாரிகள் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அவர்கள் சொல்றதைத்தான் நாங்க கேட்க வேண்டியுள்ளது’’ என்று சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார்கள் மூத்த தலைவர்கள். சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வருவதையும் பார்க்க முடிகிறது.
எனவே ’’இது குறித்தும் முதலமைச்சர் உடனடிய கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் காலத்தில் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பது கட்சி நிர்வாகிகள்தான். அதிகாரிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.
ஆட்சியின் சாதனை முகம்
இந்நிலையில், ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மலரை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் அல்ல. அன்பு நிறைந்தது. சனாதானம் அல்ல, சமூக நீதி. ஜாதி, மதத்தால் மக்களை பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மடல் என்றால் புரியாது. தமிழ்நாட்டில் உள்ள அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியும்’’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ’’என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வின்றி, சக்திக்கு மீறி பணியாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். கடந்த ஆட்சியில் சீரழிந்த அரசு நிர்வாகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இருண்ட தமிழ்நாட்டில் விடியல் உண்டாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகும் திமுக ஆட்சி தொடரும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
குறைகள் களைந்து நிறைகளோடு தொடரட்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
source https://news7tamil.live/what-do-the-leaders-and-volunteers-say-about-the-two-year-period-of-the-dravida-model-government.html