செவ்வாய், 13 ஜூன், 2023

ஜூன் 15-ஆம் தேதி குஜராத்தை தாக்க உள்ள ’பிபர்ஜாய்’ புயல்!

 12 6 23

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான பிபர்ஜாய் புயல் ஜூன் 15 -ஆம் தேதி குஜராத்தின் மாண்ட்வி, பாகிஸ்தானின் கராச்சி இடையே 150 கி.மீ வேகத்தில் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

பிபர்ஜாய் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புயலாக தீவிரமடைந்த பிபர்ஜாய் புயல் தற்போது மும்பை கடற்கரையில் இருந்து 500 முதல் 600 கி.மீ தொலைவிலும், குஜராத் துவாரகாவிலிருந்து  தென்மேற்கே 380 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு பிபர்ஜாய் புயலானது குஜராத்தின் மாண்ட்வி மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கராச்சி கடற்கரைக்கு இடையே 150 கி.மீ வேகத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி மும்பை மற்றும் தானேவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டில் அரபிக்கடலில் உருவாகும் முதல் புயல் பிபர்ஜாய் புயல் என்றும், தற்போது 7 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வரும் நிலையில் மும்பையில் பலத்த சூறாவளி காற்று வீசுவதோடு, கடலும் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. குஜராத்தை பொறுத்தவரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஏழு குழுக்கள் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புப் படையும் தயார் நிலையில் உள்ளது. போர்பந்தர், துவாரகா, ஜாம்நகர், கட்ச் மற்றும் மோர்பி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மத்திய அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் மற்றும் சவுராஷ்டிரா-கட்ச் கடற்கரையோரம் ஜூன் 15 வரை மீன்பிடி நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

source https://news7tamil.live/cyclone-bibarjoy-to-hit-gujarat-on-june-15.html

Related Posts: