வியாழன், 8 ஜூன், 2023

ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” – திமுக நாளேடான முரசொலி தலையங்கம்

 7 6 23

“ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” என திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழு மையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை!

ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிரான அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார் ஆர்.என். ரவி. அதேநேரத்தில் மற்ற பல மாநிலத்தின் விழாக்களை இங்கே உட்கார்ந்து கொண்டு கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் உருவான தினம், மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினம், மிசோரம் மாநிலம் உருவான தினம், கோவா மாநிலம் உருவான தினம், தெலுங்கானா மாநிலம் உருவான தினம் – என்று மற்ற மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

பொழுது போகவில்லை என்றால் ஊரில் உள்ள அனைவர் பிறந்தநாளையும் கொண்டாடிக் கொள்ள வேண்டியது தான். மனதுக்குள் இந்திய நாட்டையே தான் ஆள்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார் போலும்!

‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாதாம். ஆனால் மற்ற மாநில விழாக்களை தமிழ்நாட்டில் கொண்டாடுவாராம். ‘மாநிலங்களே எதற்காக?’ என்று கேட்பாராம். ஆனால் வாராவாரம் மாநில விழாக்களைக் கொண்டாடுவாராம். ‘மாநிலங்களே இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிறதாம்’. ஆனால் அவர் மட்டும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு அதிகாரத்தை அனுபவிப்பாராம். எத்தகைய ஏமாற்று இது?!

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார் ஆளுநர். துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும், தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை?

ஆளுநர் பதவி என்பது ஒன்றியத் தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி. தொட்டி, தோப்பாகாது. எனவே, வெட்டிப் பேச்சுகளை விடுக்க ஆளுநரைக் கேட்டுக்கொள்கிறோம்!


source https://news7tamil.live/governors-insults-are-intolerable-dmk-daily-murasoli-editorial.html

Related Posts: