14 6 23
மத்திய அரசு பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் பார்த்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
”அமைச்சர் செந்தில் பாலாஜி வெகு விரைவில் பூரண குணமடைவார் என்று நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது போல், பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துக் கொண்டு கொண்டிருக்கிறது.
கர்நாடகாவிலும், மேற்குவங்கத்திலும் செய்த நடவடிக்கையை மத்திய அரசு தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது. இதற்கெல்லாம் முதலமைச்சர் அஞ்ச மாட்டார். எந்த பழி வாங்குதல் நடவடிக்கையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் திறமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எல்லா காலத்திலும் உண்டு.
திமுகவை பழிவாங்குவதற்கு கடந்த காலங்களில் மிசாவிலே கைது செய்தனர். மத்திய அரசின் அரசியலுக்காக செய்யும் இந்த பொய் பிரச்சாரத்தை எதுவாக இருந்தாலும் அவற்றை எதிர்கொள்வோம். இந்த பொய் பிரச்சாரத்தை அரசு எதற்காக செய்கிறது என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
source https://news7tamil.live/this-is-an-action-to-take-revenge-on-state-governments-and-ministers-not-ruled-by-bjp-minister-ponmudi-interview.html