புதன், 9 ஆகஸ்ட், 2023

டெல்லி அரசுக்கு எதிரான நிர்வாக மசோதாவிற்கு அதிமுக ஆதரவு – அமைச்சர் ரகுபதி கண்டனம்!

 

டெல்லி அரசுக்கு எதிரான நிர்வாக மசோதாவை அதிமுக ஆதரித்ததற்கு, அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகையில் பேட்டியளித்த அவர், பாஜகவுக்கு அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டதாக விமர்சித்தார்.

நாகையில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைப்பெற்றது. விழாவில் 2 கோடியே 90 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிட்டில் 6 ஆயிரத்து 29 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

தொடர்ந்து நாகை மாவட்டத்தில் இரண்டாவது புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் புத்தகம் வாங்குவதற்கு பணம் சேமிக்க வேண்டும் என்பதற்காக மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிகளுக்கும் அமைச்சர் ரகுபதி இலவச உண்டியலை வழங்கினார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், குறுவை காப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை துறை அமைச்சரோடு கலந்து பேசி உரிய முடிவு எடுப்பார் என்றும் மத்திய அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அனைத்தும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

காவிரி கடைமடை பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தண்ணீர் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும், மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும், இயன்றவரை பயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் தெரிவித்தார். அவ்வாறாக பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாந்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.

குறுவை காப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை துறை அமைச்சரோடு கலந்து பேசி உரிய முடிவு எடுப்பார் என்றும் காவிரி நீர் விவகாரத்தில் முன்னாள் அதிமுக அரசு எந்தளவு அழுத்தம் கொடுத்துள்ளது, தற்போது முதலமைச்சர் எந்த அளவு அழுத்தம் கொடுத்துள்ளார் என்பது தெரிந்த விஷயம். மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்துள்ளதால் கூடுதலாக தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மாநில அதிகாரம் குறைப்புக்கு ஆதரவாக தான் அதிமுக முடிவெடுக்கும் என்று கூறிய அவர், அதிமுக என்பது பாரதிய ஜனதா கட்சியுடன் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் பாஜக எது சொன்னாலும் கை தூக்க கூடியவர்கள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்தார்.


source https://news7tamil.live/aiadmk-support-for-administrative-bill-against-delhi-government-minister-raghupathi-condemned.html

Related Posts: