திங்கள், 7 ஆகஸ்ட், 2023

மணிப்பூர் அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்ற குக்கி மக்கள் கூட்டணி!

 

மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு  பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து சுமார் 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். மேலும் கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.

அதோடு இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதோடு கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. குக்கி மக்கள் கூட்டணிக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே, ஆதரவை வாபஸ் பெற்றாலும் பிரேன் சிங் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற போதும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


source https://news7tamil.live/the-kuki-peoples-alliance-has-withdrawn-its-support-to-the-manipur-bjp-government.html

Related Posts: