திங்கள், 7 ஆகஸ்ட், 2023

காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முஃப்திக்கு வீட்டுக்காவல் ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

 

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ  ஆளும் பாஜக அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  நீண்டகால  செயல் திட்டங்களில் ஒன்றாகும். மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமா்வு தொடா்ந்து விசாரித்து வருகிறது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெஹபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவின் காரணமாக காஷ்மீர் மக்களால் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடிகிறது என காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

”நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய பாஜக அரசு கொண்டாடுகிறது ஜனாதிபதி கென்னடி சொன்னது என் நினைவிற்கு வருகிறது: “நாம் விரும்புவது கல்லறையின் அமைதியும் அடிமையின் மொளனமும் அல்ல”.

காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் திருமதி மெஹ்பூபா முப்தி அவர்களை ஏன் நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்? காஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஏன் பூட்டுப் போட்டிருக்கிறார்கள்?” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/why-keep-mehbooba-mufti-under-house-arrest-if-there-is-peace-in-kashmir-p-chidambaram-question.html

Related Posts: