இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்பாக 19-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா- சீனா இடையில் எல்லை தகராறு ஏற்பட்டது. இதில் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை வெளியேற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சீன வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இதில் இருதரப்பிற்கும் உயிர்சேதம் ஏற்பட்டது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளுக்கு இடையிலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாகவும், மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இந்தியா-சீனா ராணுவத் தளபதிகள் இடையேயான 19-ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. லெப்டினென்ட் ஜெனரல் ரஷீம் பாலி தலைமையில் இந்தியத் தரப்பினர் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளனர்.
வெளியுறவு அமைச்சகம், இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெப்சாங், டெம்சோக் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீனா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்புக்கு இடையேயான 18-ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றிருந்தது. அதில் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/the-border-issue-between-india-and-china-military-officials-of-the-two-countries-held-talks-today.html