13 9 23
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் கண்காணிப்பு தீவிரபடுத்தப் பட்டுள்ளது.
கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி கடந்த ஆக. 30-ல் உயிரிழந்தார்.
அதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் மற்றொரு நோயாளி உயிரிழந்தனர். அவர்களின் மாதிரிகள் மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் இருவரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், செவ்வாய் கிழமை (செப்.12) கோழிக்கோடு பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ’நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. தனி வார்டுகளில் அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
கோழிக்கோடு பகுதியில் சுமார் 75 பேரை தனிமைப்படுத்தி உள்ளோம். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, உதவி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. காய்ச்சல் பாதிப்புள்ள 4 பேரின் மாதிரிகளை புனே ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அவற்றின் முடிவுக்காக காத்திருக்கிறோம், என்றார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/kerala-nipah-virus-deaths-security-measures-tightened-up-in-tamil-nadu