சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிஞர் சி.என். அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக கூட்டணி கட்சியான அ.தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் ஜெயக்குமார், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என அறிவிப்பதாக கூறினார். இது தமிழக அரசியல்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்விவகாரத்தில் இரு கட்சிகளின் தலைமையும் மௌனம் காத்துவருகின்றனர். தொடர்ந்து அ.தி.மு.க மூத்த தலைவர்கள் டெல்லி சென்று ஜே.பி.நட்டா, பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் அ.தி.மு.க- பா.ஜ.க விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் படியூரில் தி.மு.க பயிற்சி பாசறைக் கூட்டம் நேற்று(செப்.24) நடைபெற்றது. இதில் முதலமைச்சர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்ககப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் படியூருக்கு சென்றார்.
கூட்டடத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "திருப்பூரில் தொண்டர்களைப் பார்க்கும் போது களைப்பு நீங்கி உற்சாகம் ஏற்படுகிறது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சந்தித்துக் கொண்ட ஊர் திருப்பூர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.கவை பயமுறுத்தி அச்சுறுத்தி பா.ஜ.க தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க சண்டை போடுவதாக வெளியில் நாடகம் செய்கிறார்கள். உள்ளே நட்பாக உள்ளார்கள். எதற்காக இந்த நடிப்பு.
அ.தி.மு.கவை ஆதரித்தால் அவர்களுடைய ஊழலுக்கு பா.ஜ.கவும் பொறுப்பேற்ற வேண்டி இருக்கும். பா.ஜ.கவை ஆதரித்தால் அவர்களுடைய மதவாதத்திற்கு அ.தி.மு.கவும் துணை போக வேண்டி இருக்கும். அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சண்டை போடுவதாக வெளியே நடித்துக் கொண்டு உள்ளே நட்பாக இருக்கிறார்கள்" என விமர்சனம் செய்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-bjp-row-stalin-hits-that-it-is-drama-1382503