வெள்ளி, 15 செப்டம்பர், 2023

திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

15 09 2023 

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லுாரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சனாதன எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கிடாரக்கொண்டான் அருகே திரு.வி.க அரசு கலைக் கல்லுாரி  உள்ளது. இக் கல்லுாரியில் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லுாரியில் சனாதனம் எதிர்ப்பு பற்றிய மாணவர்களின் கருத்துக்களை அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப். 15-ம் தேதி காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு ஒரு சுற்றிக்கையை முதல்வர் கையெழுத்துடன் வெளியிடப்பட்டது. இந்த சுற்றிக்கை இணையத்தில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சனாதன எதிர்ப்பு குறித்த மாணவர்களிடம் கருத்துகளை கேட்டு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதாக கூறி இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

எனவே பல சர்ச்சைக்குள்ளாகிய நிலையில் இந்த சுற்றிக்கையை திரும்பெறுவதாக கல்லுாரி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் சனாதனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்லுாரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நேற்று பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கல்லுாரி வளாகத்தில் பேரணியாக சென்ற மாணவர்கள் ‘மனித குலத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்ற வாசகம் புரிந்த காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் இணைந்த புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து காவி எங்கள் நிறமல்ல சிவப்பு எங்கள் நிறமடா என பல முழக்கங்களை எழுப்பினர். இதில் அக்கல்லுாரியில் உள்ள பல்வேறு துறை மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனகா காளமேகன் 


source https://news7tamil.live/students-protest-against-sanathanam-in-tiruvarur-government-college.html