ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! -தந்தை பெரியார் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்…

 

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வேலூரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் சமூக சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், வேலூரில் நடைபெற்ற நிகழச்சியில் பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து வேலூர் மேல்மொனவூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 79 கோடியே 70 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 591 குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொலி வாயிலாக திறந்து வைத்த அவர், பயனாளிகளுடன் உரையாடினார். தொடர்ந்து மேல்மொனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை அவர் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து – மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://x.com/mkstalin/status/1703281444825735630?s=20