வச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசு செயல்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தீர்ப்புகளை வாசித்துள்ளார்.
29 09 2023
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதிபதி P.வேல்முருகன் தீர்ப்பு விவரம் பின்வருமாறு..
உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில், அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வாச்சாத்தியில் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பழங்குடியின பெண்களை பாதுகாக்க அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை. மாறாக தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டுள்ளது.
இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, கிராமத்தினரின் சொத்துக்கள், கால்நடைகள், கோழிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது ஆகியவை அதிகாரிகளின் அலுவலக பணியல்ல. அதனால் வழக்கு தொடர்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
வாச்சாத்தி பகுதியில் சில முக்கிய நபர்கள் சந்தன கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை.
காவல்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மிரட்டல் காரணமாகவே 18 பெண்களும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை நீதிபதியிடம் கூறவில்லை. 13 வயது சிறுமி, 8 மாத நிறைமாத கர்ப்பிணி ஆகியோரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில், பொய் குற்றச்சாட்டை கிராமத்தினர் கூறி இருக்கிறார்கள் என்ற அரசு அதிகாரிகள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
சந்தன கட்டைகளை தேடுவதற்காக 18 பெண்களை அழைத்துச் சென்ற போது, பெண் காவலர் இருந்தும் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்பதிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கூட மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட வன அதிகாரியோ, காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம் அப்பாவி பழங்குடியின பெண்களின் வலியை பணத்தினாலோ வேலை வாய்ப்பு வழங்குவதினால் ஈடுகட்டிவிட முடியாது. சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது, மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி செய்துள்ளார்.
source https://news7tamil.live/vachathi-case-the-judge-accused-the-government-of-acting-to-protect-the-real-sandalwood-smugglers.html