வியாழன், 28 செப்டம்பர், 2023

தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

 27 09 2023

மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே குகி பழங்கியினத்தை சார்ந்த இரண்டு பெண்கள்  நிர்வாணப்படுத்தப்படடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

குற்றவாளிகளை ஆஜர்படுத்துதல், தடுப்புக்காவல், நீதிமன்றக் காவல் மற்றும் நீட்டிப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகளை மணிப்பூரில் நடத்தாமல் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இணைய வழியில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மணிப்பூரில் வன்முறை சற்று தணிந்த நிலையில், தற்போது மீண்டும் கலவரம் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே செப்டம்பர் முதல் வாரம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில்  வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 19 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள்  சட்டத்தின்படி (AFSPA ) என்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநில மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு “பதற்றமான பகுதிகள்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தினை அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய அறிவிப்பு  அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/continuity-of-riots-manipur-declared-as-a-state-of-tension.html